திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.18 விடந்தீர்த்த திருப்பதிகம்
பண் - இந்தளம்
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
1
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.
2
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.
3
நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.
4
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.
5
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
6
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.
7
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.
8
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தானே.
9
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.
10
இது அப்பூதி அடிகள் மகனை நாகம் தீண்டிய விடம் நீங்கும்படி அருளிச் செய்தது.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com